கலைஞர் என்னும் தர்மகர்த்தா.!

தொடர் ; 1️⃣




மதம் என்பது வேறு.! 
மதவாதம் என்பது வேறு.!

இந்து என்பது வேறு.! 
இந்துத்துவா என்பது வேறு.!

சாதி சலுகை என்பது வேறு.! 
சாதிப் பெருமை என்பது வேறு.!

இந்த மூன்றுக்குமான வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் புரிந்து கொண்டால் யாரும் யாரையும் குழப்பமுடியாது.

இதில் மதவாதம், இந்துத்துவா, சாதிப்பெருமை ஆகிய மூன்றுக்கும் எதிரான இயக்கம்தான் திராவிட இயக்கம். 

அதனால் தான் மதவாதிகளும் சாதியவாதிகளும் இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி திரிபுவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் களத்தில் எதிர்கொள்ள முடியாத கோழைகள், மக்களால் புறந்தள்ளப்பட்ட புறமுதுகில் பிறந்தவர்கள், 'இந்துக்களுக்கு எதிரி' என்று மூக்கில் இரத்தம் ஒழுக கனைக்கிறார்கள். 

தி.மு.க இந்துக்களுக்கு எதிரி என்றால் இக்கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் யார்? வானத்தில் இருந்து குதித்தவர்களா.??

பாரதிய ஜனதாக் கட்சி இந்துக்கள் கட்சி என்றால், எந்த இந்துவும் அக்கட்சிக்கு வாக்களிப்பதில்லையே ஏன்? எல்லா இந்துவுக்கும் தெரியும் பா.ஜ.க., இந்துக்களை வைத்து பிழைக்கும் கட்சியே தவிர இந்துக்களுக்கான கட்சி அல்ல என்று.

"இந்துக்களை பிழைக்க வைப்பது என்பது வேறு, இந்துக்களால் பிழைப்பது என்பது வேறு"

இரண்டாவது இரண்டகத்தைச் செய்யும் கட்சியினர்தான் தி.மு.க.வை இந்துக்களுக்கு எதிரி என்கிறார்கள்.

"இது காலம் காலமாக கேட்டுக் கேட்டு புளித்துப் போன பழைய மாவு.

முனை மழுங்கித் துருப்பிடித்த பழைய பிளேடு. 

அரதப் பழைய சிந்தனை" 

என்று சரியாகச் சொல்லி இருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று கழகத்தவரை விட எதிரிகளால்தான் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. 

அப்போதே செய்யப்பட்ட பிரச்சாரம் என்ன தெரியுமா.??

திராவிட முன்னேற்றக் கழகம் வென்றால் ஆலயங்கள் இடிக்கப்படும், தேர்த்திருவிழா நின்றுவிடும், தெப்ப உற்சவம் தடுக்கப்படும் மதவாதிகள் மனம் புண்படுத்தப்படும்.

ஆண்டவன் திருஉலா இருக்காது, ஆறுகால பூஜை நடக்காது, ஆடிக் கிருத்திகை இல்லை, திருமஞ்சனம் இல்லை, பங்குனி உத்திரம் இல்லை, கார்த்திகை தீபம் இல்லை, கருமாரியம்மன் கோவில் கூட இருக்காது' என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் தமிழகம் கண்ட காட்சி என்ன.??

1970 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறநிலையத்துறைக்குத் தனி அமைச்சரும், தனி வரவு செலவுத் திட்டமும் இருந்தது இல்லை. சட்டப்பேரவையில் அறநிலையத் துறைக்கு என தனி விவாதம் செய்த சூழ்நிலையையும் உருவாக்கியவர் முதல்வர் கலைஞர். 

ஏதாவது ஒரு மானியத்தோடு சேர்த்துத்தான் அதுவரை அறநிலையத்துறை மானியத்தையும் நடத்துவார்கள். கலைஞர் காலத்தில்தான் அறநிலையத்துறைக்கு தனியான மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவது தொடங்கப்பட்டது.

தமிழினத் தலைவராக, 
தமிழ்ப்புலவராக மட்டுமில்லை, கோவில் தர்மகர்த்தா-வைப் போல ஆலயங்களையும் காத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர முதல்வர் அண்ணா ஆணையிடுகிறார். 

பொதுப்பணித்துறை அமைச்சரான கலைஞர் அங்கேயே சென்று தங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். 

அப்போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காசிராமன், முதல்வர் அண்ணாவையும் அமைச்சர் கலைஞரையும் பாராட்டிப்பேசியது அவைக்குறிப்பில் இருக்கிறது.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மன்னராட்சி காலத்தில் அமைக்கப்பட்டது திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில். எழுநூறு ஆண்டுகளுக்கு பிறகு அக்கோவில் கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்தார் முதல்வர் கலைஞர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருப்பணியை 1975 மார்ச் மாதம் நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

பேரூர் பட்டிப்பெருமாள்_கோவில் திருப்பணியை முடித்து 1975 இல் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

சென்னை வடபழனி முருகர் கோவில் குடமுழுக்கை 1975 ஆம் ஆண்டு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

பழனி தண்டாயுதபாணி கோவில் விமானத்துக்கு தங்கத் தகடுகள் போட்டு நாற்பது லட்சம் செலவில் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை கோயில் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

கொடுமுடி மகுடேஸ்வரர் சாமி கோவில்,

திருவண்ணாமலை அருணாசலசாமி கோவில் குடமுழுக்கு, 

இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவில் குடமுழுக்கு,

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பணிகள் முதல்வர் கலைஞர் காலத்தில்தான் நடந்தன.

பழனிக்கோவில் மலை பகுதியை விரிவுபடுத்தும் திருப்பணி வேலைகளை தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர்.

நெல்லையப்பர் கோவில் கலைக்கூடம்அமைக்கும் பணியை தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர்.

நெல்லை கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

சங்கரன்கோயில் ஆலயத் திருப்பணிகள் தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது.

கள்ளபிரான் கோவில் திருப்பணிகள் தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.

ஆழ்வார் திருநகர் வடுவூர் கோதண்டராமசாமி கோவில்

திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவில், 

தஞ்சை மாவட்டம் பருத்தியப்பர் கோவில், 

பத்தணை நல்லூர்கோவில், 

திருமுல்லைவாயில் கோவில்,

மதுரை கூடலழகர் கோவில், 

சோளிங்கர் கோவில், 

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், 

சிதம்பரம் நடராசர்கோவில்,

திருமுஷ்ணம் கோவில், 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், 

வட சென்னை பாலசுப்பிரமணியர் கோவில்,

இடும்பாவனம், தாராபுரம், மூலனூர்,வஞ்சியம்மன் கோவில், 

அவிநாசி கோவில், 

காரமடை அரங்கநாதர் கோவில்,

அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அம்மன் கோவில் - ஆகியவைகளில் திருப்பணி முடிந்தும், குடமுழுக்கு நடைபெற்றும் இருந்த நேரத்தில்தான், 1976இல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.

திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சென்னிமலை ஆகிய மலை கோவில்-களுக்கு சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஒழுங்கான சாலைகள் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சியில் தான்.

பழனி கோவில் திருப்பணி தொடக்கவிழாவுக்கு முதல்வர் கலைஞரே நேரில் சென்று தொடங்கி வைத்தார். 

அக்கோவில் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளித் தொடக்கவிழாவுக்கும் முதல்வர் கலைஞர் சென்றார்.

அதாவது சிறியதும், பெரியதுமான ஐந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளை அந்த ஒன்பது ஆண்டு காலத்தில் (1967 - 75) செய்து காட்டியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.!

இவை அனைத்துக்கும் மேலாக கோவில்களைக் கண்டுபிடித்துக் காத்தவரும் முதல்வர் கலைஞர்!

1967-ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 9,600 அறநிலையங்கள் மட்டுமே இருந்தன.

அறநிலையத்துறைக்கு கட்டுப்படாமல் பல்லாயிரக்கணக்கான கோவில்களும் அவற்றுக்குச் சொந்தமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தனியார் வசம்இருந்தன. 

அதனை மீட்க முதல்வர் கலைஞர் அவர்கள், தனி அலுவலர் ஒருவரை நியமித்தார். 

அவர் நடத்திய ஆய்வில்தான் தமிழகத்தில் 41 ஆயிரத்து 306 அறநிலையங்களும், அவைகளுக்குச் சொந்தமாக 2 இலட்சத்து 1,343 ஏக்கர் நிலமும் தனியார் வசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவைகளில் சுமார் 25 ஆயிரம் அறநிலையங்களும், 65 ஆயிரம் ஏக்கர் நிலமும் அந்தக் காலக்கட்டத்தில் (1967-75)மீட்கப் பட்டது.

1967க்கு முன்னால் தமிழ்நாட்டுக் கோவில்களின் ஆண்டு வருமானம் மொத்தம் ரூ. 3 கோடி அளவுக்குத்தான் இருந்தது. 

1975-76 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.12 கோடி ஆனது.

டெல்டா மாவட்டத்தில் ஒரு தர்மகர்த்தா, அந்த ஊர் கோவில் சுவாமியின் பெயரைத் தனது மகனுக்குவைத்தார். ஆண்டவன் பெயரால் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் தன் குடும்பத்துக்கு மாற்றிக்கொண்டார். 

இந்தப் பரம்பரைத் தர்மகர்த்தாவைக் கண்டுபிடித்து வழக்குப் போட்ட ஒரிஜினல் தர்மகர்த்தா கலைஞர்தான்.

கோவில்களின் மூலமாக ஏழைபக்தர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைத் தீட்டியவர் முதல்வர் கலைஞர். 

மிகக் குறைந்த செலவில் திருமணங்கள் நடத்திக் கொள்ள 1967-75 ஆகிய காலக்கட்டத்தில் மட்டும் 80 திருமண மண்டபங்கள் கட்டிக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர். 120 மண்டபங்கள் கட்டித் திறக்கப்படும் நிலையில் இருந்தன.

அனாதைக் குழந்தைகளுக்காக அரசு உதவி செய்து கோவில்கள் சார்பில் கருணை இல்லங்களைத் திறந்தவர் முதல்வர் கலைஞர்.

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் கருணை இல்லத் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் திருமுருக கிருபானந்த வாரியார். 

“முதல்வர் கலைஞர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களைப் பார்த்து, நல்ல காரியம்செய்தாரப்பா முதல்வர் என்று எம்பெருமானே மகிழ்வார்” 

என்றுசொன்னார். 

வாரியாருக்கு புரிந்தது அது. 
இன்றைய சிறியார்க்கு அது புரியாது.!

(தொடரும்)

- ப.திருமாவேலன் | முரசொலி (23/07/2020) 



☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
அடுத்த தொடரை படிக்க 
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

தொடர் :  2️⃣⤵️

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

ThankYouMK  Kalaignar Karunanidhi  DMK4India  DMK

திராவிட பேரரசன் 👑
கலைஞர் 🖋
கருணாநிதி 🕶💺

கலைஞரிஸ்ட் -  kalaignarist


Visit to Like Our Other Sites





Comments