கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள் இருட்டறையில் முடங்கிக் கிடந்த பெண்களுக்கு உதயசூரியனின் பேரொளியைக் காட்டின

மகளிர் மேம்பாடு
பெண்களுக்காகவும் சுடர்ந்த சூரியன்

Kalaignarist Youtube Channel

Kalaignarist Facebook Page

Kalaignarist Twitter Account

இந்தியா விடுதலையடைந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தலைகீழ் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது.

அதுவரை அரியணையில் அமர்ந்தி ருந்த, பலம் பொருந்திய தேசியக் கட்சியான காங்கிரஸை 1967 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது மாநிலக் கட்சியான திமுக. அதன் முதல் முதலமைச்சரான அண்ணாதுரை ஈராண்டுகளுக்குள், 1969-ல் மறைய, கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் வரிசையிலிருந்த கலைஞர் மு.கருணாநிதி முன்னேறினார்; முதல்வரானார்.

திராவிட அரசியல் நிலைப் பாட்டைக் கொண்ட கட்சியான திமுக, ஒடுக்கப்பட்டோரின் நலனையும் சமூக நீதியை நிலைநாட்டுவதையும் தன் முக்கியக் கடமைகளாகக் கொண்டிருந்தது.

தந்தை பெரியாரிடம், அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றறிந்த முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியும் இவற்றில் தீவிர அக்கறை கொண்டிருந்தார்.

மாற்றத்துக்கான விதை:

ஒடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடும்போது அதன் முதல் வரிசையில் இருப்பவர்கள் பெண்கள்.

சாதி, மத வித்தியாசம் இன்றி அனைத்துக் குடும்பங்களிலும் நிலவும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஒன்றல்ல; ஓராயிரம்.

அவை அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிய மிகப் பெரிய சமூக மாற்றம் தேவை.

அந்த மாற்றத்துக்கான விதையைத் தூவிய பெரியாரின் வழியில் அண்ணாவை அடியொற்றி நடைபோட்டவர் கலைஞர்.

அதற்கான சான்றுகளாக கலைஞர் கொண்டுவந்த மகளிருக்கான திட்டங்களைச் சொல்லலாம்.

அந்தத் திட்டங்களால் பயனடைந்த பெண்கள், கலைஞர் மறைந்த மறுநாள் ஆகஸ்ட் 8 அன்று நிகழ்ந்த கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் கலந்துகொண்டார்கள்.

தங்கள் வாழ்வில் மலர்ச்சியைக் காண விரும்பிய தந்தையாக, தமையனாக, தனயனாகச் செயல்பட்ட மனிதரின் மரணம் அவர்களை உலுக்கியிருந்தது.

ஆகவே, கட்சி வேறுபாடின்றி அவருக்குத் தங்கள் அஞ்சலியைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள்.

அனைத்துத் தரப்புக்குமான திட்டங்கள்:

பெண்களுக்காக அவர் கொண்டுவந்த திட்டங்களைப் பார்த்தால் மகளிர் நலனுக்காக கலைஞர் உண்மையிலேயே செயல்பட்டாரா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

பெண்களின் பெரும் பிரச்சினைகளில் அவர்களது கல்வியும் திருமணமுமே முன்னிலையில் நிற்கும். ஆகவே, பெண்கள் கல்வி கற்கவும் மணமுடிக்கவும் திட்டங்கள் வேண்டும்.

சரி, மணமுடித்த பெண்கள் கணவனை இழந்தால் கைம்பெண்களாகிவிடுகிறார்களே அவர்களுக்கும் உதவ வேண்டுமே.

இன்னும் சில பெண்கள் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கக்கூடும் அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே.

ஏழை எளிய பெண்களுக்கு இவை எல்லாம் உதவும்.

சொத்து நிறைந்த குடும்பத்துப் பெண்களுக்கு என்ன செய்வது? அந்தச் சொத்தில் சம உரிமையைப் பெற்றுத்தர வேண்டியது அவசியம்தானே? சரி, அரசியல் ஈடுபாடுகொண்ட பெண்களை அரசியலிலும் ஈடுபடுத்த வேண்டுமே.

அதற்கும் திட்டம் உண்டு.

இப்படிப் பெண்கள் மீது அக்கறை கொண்டு எந்தவகையிலும் எந்தத் தரப்புப் பெண்ணும் விடுபட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் உதவும்படியான திட்டங்களை முன்னெடுத்ததில் கலைஞரின் கூர்மதியும் பங்களிப்பும் காலகாலத்துக்கும் நினைவுகூரத்தக்கவை.

கணவனை இழந்த பிறகும் வாழ்க்கை:

கணவன் இறந்துவிட்டால் பெண்ணுக்கு வாழ்வே முடிந்துவிட்டது என்ற சமூகத்தின் அறியாமையை அகற்ற கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது அவசியம்.

அதற்கு உதவும் வகையில் கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் 1975-ல் கொண்டு வரப்பட்ட திட்டம்தான்  ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம்’.

கைம்பெண்களின் மறுவாழ்வை ஊக்கப்படுத்தவும் அவர்களின் மறுமணத்துக்கு ஆதரவு தருவதற்குமான நிதியுதவித் திட்டம் இது.

இந்தத் திட்டத்தில் அப்போது 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

2009-ல் இது ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் உதவிபெற வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.

திருமணத்துக்கு உதவும் அதேநேரம் மணமுடிக்க விரும்பாத கைம்பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்தார் அவர்.

அது, 1975 ஜூன் 1 அன்று கொண்டுவரப்பட்ட, ‘ஆதரவற்ற கைம்பெண் உதவித்தொகை திட்டம்’.

18 வயதுக்கு மேற்பட்ட கைம்பெண்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது.

வீட்டிலிருந்தபடியே உழைத்துப் பிழைக்க விரும்பும் 20 முதல் 40 வயது கொண்ட பெண்களுக்கு உதவுவதற்காக, ‘சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்ட’த்தை 1975-ல் அறிமுகப்படுத்தினார் கலைஞர்.

பெண் கல்விக்கு ஆதரவு

ஆண்களின் கல்வி குடத்து நீரெனில் பெண்களின் கல்வி குளத்து நீர்.
அதனால் சமூகமே பயனடையும்.

ஆகவே, பெண்களின் கல்விக்கு உதவும்வகையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர்,  ‘பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்ட’த்தை 1989-90-ல் கொண்டுவந்தார். 

வருட வருமானம்  ரூ.24 ஆயிரத்துக்குட்பட்ட எளிய குடும்பத்துப் பெண்கள் பட்டப் படிப்பு படிக்க உதவும் திட்டம் இது.

1989-ல், கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று கொண்டுவந்த மற்றொரு திட்டம், ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’.

இது திருமண உதவித் திட்டம் என்றபோதும் மறைமுகமாகப் பெண் கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாகவும் செயல்படுகிறது.

குடும்பத்தின் வருட வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குட்பட்ட ஏழை எளிய பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் அமைந்த திட்டம் இது.

நிதி உதவி பெற விரும்பும் பெண்கள் பத்தாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி.

எனவே, இந்தத் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

பழங்குடியினப் பெண்கள் 5-ம் வகுப்புவரை படித்திருந்தால் போதும் என்பதைப் போன்ற விதிகளைக் கருத்தூன்றிக் கவனிக்கும்போது திட்டங்கள் பயனாளிகளுக்குப் போய்ச்சேருவதிலும் அவர் கொண்டிருந்த அக்கறை விளங்கும்.

பொருளாதார விடுதலை:

பெண்களது சமூகச் செயல்பாட்டையும் நிர்வாகத் திறனையும் வளர்க்க உதவும் வகையில், 1989-ம் ஆண்டு தர்மபுரியில் கலைஞர் தொடங்கிவைத்தது மகளிர் சுயஉதவிக் குழு திட்டம். கிராமப்புறப் பெண்கள் சிறு குழுவாக ஒருங்கிணைந்து வாழவும், வருமானம் ஈட்டவும் உதவிய திட்டம் இது.

1989-ல் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி ஆண்களைப் போல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வகை செய்யப்பட்டது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் கலைஞரின் ஆட்சியில் வழங்கப்பட்டன.

மாற்றுப் பாலினத்தவருக்குத் திருநங்கைகள் என்ற கவுரமான பதத்தை வழங்கியதுடன் அவர்கள் மரியாதையான வாழ்வு நடத்துவதை ஆதரிப்பதற்காக, ‘தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்15.4.2008 அன்று தொடங்கப்பட்டது.

அதுவரை மாற்றுப் பாலினத்தவரை ஏளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட இந்த நடவடிக்கை உதவியது.

தொலைநோக்குப் பார்வை :

திருமணமே செய்துகொள்ள விரும்பாத பெண்கள் பயனடையவும் ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறார் கலைஞர்.

அது 2008 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட ‘முதிர்கன்னி உதவித் திட்டம்’. இந்தத் திட்டத்தில் திருமண மாகாத 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 நிதி உதவி கிடைக்கிறது.

கலைஞர் கொண்டுவந்த இவை போன்ற திட்டங்கள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தைக் கொண்டே செயல்படுத்தப்பட்டன. 

ஆனால், அத்தகைய திட்டங்கள் அவசியம் என்பதை உணர, முன்மொழிய, வழிமொழிய பெண்களின் துயரம் அறிந்த முதல்வர் தேவைப்பட்டார்.

அந்த முதல்வராக கலைஞர் இருந்தார். திட்டங்கள் தீட்டுவதில் வெறுமனே கடமையைத் தட்டிக்கழித்தால் போதும் என்று செயல்பட்டவரல்ல அவர்.

திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து பயனாளிக்கான விதிகளைத் தீர்மானிப்பதுவரை ஒவ்வொன்றிலும் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டுச் செயல்படுத்தியிருக்கிறார்.

யாருக்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ அவை பயனாளிகளைச் சென்றடைகிறதா என்பதை விசாரித்து அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இவையெல்லாம் அவரது தொலைநோக்குப் பார்வையை உணர்த்துகின்றன.

கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள் இருட்டறையில் முடங்கிக் கிடந்த பெண்களுக்கு உதயசூரியனின் பேரொளியைக் காட்டின.

அதனால்தான் தமிழ்ப் பெண்களில் நெஞ்சம் நிறைந்த தலைவராயிருக்கிறார் இன்று அவர்.

Kalaignarist Youtube Channel

Kalaignarist Facebook Page

Kalaignarist Twitter Account

Credit : செண்பகம்

திராவிட_பேரரசன் 👑
கலைஞர் 🕶🖋

கலைஞரிஸ்ட் - kalaignarist

Comments