கலைஞரின் திமுக அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்க்கும் செய்த நலத்திட்டங்கள்

இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி
1957 முதல் 2018 வரை...
கலைஞர் விவசாயத்துக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்?
தி.மு.க கட்சி சந்தித்த முதல் தேர்தல் அது. அப்போதைய தி.மு.க-விற்கு அங்கீகாரம் இல்லாததால் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகவே போட்டியிட்டனர்.
அனைவரும் உதய சூரியன் சின்னத்தைக் கேட்டனர்.
அப்போதைய தி.மு.க தலைவரான அண்ணாவிற்குச் சேவல் சின்னம் கிடைக்க, கலைஞருக்கு உதய சூரியன் சின்னம் கிடைத்தது.
குளித்தலையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலைஞர் 1957-ம் ஆண்டு முதல் முதலாகச் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
முதல் சட்டப்பேரவை பேச்சாக குளித்தலையில் உள்ள நங்கவரம் பண்ணை நிலக்கிழாருக்கும், விவசாயிகளுக்கும் இருந்த பிரச்னைகள் குறித்துப் பேசுகிறார்.
அவரது முதல் சட்டமன்றப் பேச்சு கண்ணீருடன் முடிகிறது. அப்போது ஆரம்பித்த பயணம், அவர் இறுதி வரைக்கும் தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர் விவசாயிகளுக்காக முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் கொண்டாடப்பட வேண்டியவைதான்.
1972 -ம் ஆண்டு தமிழக மாணவர்கள் விவசாயப் பொறியியல் கற்க தென்னிந்தியாவில் முதன் முதலில் விவசாயக் கல்லூரி ஆரம்பித்தவர் கலைஞர்.
அதிலிருந்த கால்நடைப் பிரிவை தனியாகப் பிரித்து, 1989-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார்.
1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்குக் கொடுத்தார்.
1990-ம் ஆண்டு பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசம் என அறிவித்தார்.
இதனால் பலன் அடைந்த விவசாயிகளின் அப்போதைய எண்ணிக்கை 16 லட்சம்.
இந்தியாவிலேயே முதன்முதலாகக் விவசாயிகளுக்காக ‘மின்சாரம் இலவசம்’ என்று கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் அது.
அதற்குப் பின்னால் ஒரு கதையும் இருக்கிறது. 1989-ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்கும் யோசனையில் மும்முரமாக இருந்தார்.
அப்போதைய மின்வாரிய அதிகாரிகள் “அதிக செலவாகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மின்சாரம் இலவசம் என்று கிடையாது” என்று சொன்னார்கள்.
அதனை மறுத்த கலைஞர், “விவசாயிகள் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு பயன்படுற மாதிரி ஏதாவது நல்ல திட்டம் வேணும்னு தோணுது.
விவசாயிகள் மின்சாரத்துக்காக ரொம்ப கஷ்டப்படுறாங்க. அதனால இதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று இலவச மின்சாரத்துக்கான ஆணை வெளியிட்டு உறுதி செய்தார்.
இதைத்தான் இன்று பல மாநிலங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன.
1996 முதல் 2001ம் ஆண்டில் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் தமிழக முழுவதிலும் அமைத்தார்.
1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தார்.
இதைக் கண்டித்து மாநிலம் முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய தி.மு.க பலமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதனைக் கண்டு கொஞ்சம் பின்வாங்கினார் ஜெயலலிதா.
மீண்டும் 1996-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த கலைஞர் இலவச மின்சாரத்தை 25 விழுக்காட்டிலிருந்து 27 விழுக்காடாக அதிகரித்தார்.
1996-2001-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்கைச் சீற்றத்தால் இறக்கும் ஆடுகளுக்கு 1000 ரூபாயும், மாடுகளுக்கு 5,000 ரூபாயும், கன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கியவர்.
1996-97-ல் வறட்சி, 1997-ம் ஆண்டு நவம்பர் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் குறுகிய காலக் கடன்கள் அனைத்தும் மத்திய காலக் கடன்களாகவும், மத்தியகாலக் கடன்கள் அனைத்தும் நீண்டகாலக் கடன்களாகவும் மாற்றப்பட்டது.
அபராத வட்டியாக இருந்த 50 கோடி ரூபாய் விவசாயிகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
1998-99-ம் ஆண்டு நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்குக் கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
ஆனால், அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணம் 2000-2001-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நவீன வங்கிக் கட்டிடங்கள், 10,000 எக்டேர் தரிசு நிலத்தினை மேம்பாடு செய்து மரக்கன்று சாகுபடி, நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் மாத ஓய்வூதியம், கூட்டுறவு வங்கிகள் நகைக் கடனை 1 லட்சமாக உயர்த்தியது, யூரியா உரத்திற்கு விற்பனையாக இருந்த 4 விழுக்காட்டு வரியை 2 விழுக்காடாகக் குறைப்பு, பழைய ஆயில் இஞ்ஜின்களுக்குப் பதிலாக புதிய ஆயில் இஞ்சின் வழங்குதல், கரும்பு பயிர்க்கடன் மற்றும் ஆதார விலையை உயர்த்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் போக்குவரத்துக்கட்டணம் வழங்குதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை என்பது உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார் கலைஞர்.
பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகண்ட திட்டமான ‘உழவர் சந்தை’ திட்டத்தை 1999-ம் ஆண்டு தமிழகத்திலும் அறிமுகப்படுத்தினார், கலைஞர்.
விவசாயிகள் இடைத்தரகர்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அப்போது 103 உழவர் சந்தைகளை தமிழகம் முழுவதும் அமைத்தார்.
ஆனால் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு உழவர் சந்தை திட்டத்தை ரத்து செய்து, பூட்டுப் போட்டார்.
2007-ம் ஆண்டில் பழைய உழவர் சந்தைகளையும் சேர்த்து 153 - ஆக விரிவுபடுத்தி அத்திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தார் கலைஞர்.
2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்குப் பதவியேற்ற நாள் அன்று மேடையிலேயே விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை முழுவதுமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதனால் தமிழகத்தில் உள்ள 22 லட்சத்து 40 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் பயனடைந்தன.
விவசாயிகளுக்கு 8 லட்சத்திற்கு மேலான உர அடையாள அட்டைகளை வழங்கியுள்ளார்.
பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2006-ம் ஆண்டு 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தது.
2009-2010-ம் ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர் காப்பீடு செய்தனர்.
2006 முதல் 2010 வரையிலான நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 891 கோடி ரூபாயை வழங்கினார்.
2006-2010-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட தனது ஆட்சிக் காலத்தில் ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி.
1 லட்சத்து 57 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர்.
2005 - 2006-ம் ஆண்டு விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 9 சதவீதமாக இருந்தது.
அதை 2006 - 2007-ம் ஆண்டு 7 சதவீதமாகக் குறைத்து, 6,31,283 பேருக்கு, 1250 கோடியே 62 லட்ச ரூபாயும்,
2007-2008- ம் ஆண்டு 5 சதவீதமாகக் குறைத்து, 6 லட்சத்து 48 ஆயிரத்து 397 பேருக்கு 1,393 கோடியே 97 லட்ச ரூபாயும்,
2008-2009-ம் ஆண்டு 4 சதவீதமாகக் குறைத்து, 6 லட்சத்து 91 192 பேருக்கு 1570 கோடியே 99 லட்ச ரூபாயும்
2009-2010-ம் ஆண்டு பயிர்க் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலும் ரத்து செய்தார்.
2010 - 2011-ம் ஆண்டில் 8 லட்சத்து 1960 விவசாயிகளுக்கு 2453 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை ரத்து செய்தார்.
2006-க்கு பின்னர் மொத்தம் 36 லட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 6 லட்ச ரூபாய் பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளன.
அப்போது நிலுவையில் இருந்த இரண்டு லட்சம் பம்பு செட்டுகளுக்கு படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை தமிழக நெல் விவசாயிகள் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு நெல்லுக்கு நிர்ணயிக்கும் விலையுடன் மாநில அரசின் சார்பில் மானியம் வழங்கியது, கலைஞரின் தி.மு.க அரசு.
விவசாயிகளின் நலனைக் கருதி தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்.
விவசாயிகளின் பிரச்னை குறித்து ஆராய்வதற்கு விவசாயிகள் நல வாரியம் அமைத்தார்.
முதன் முதலாக நிதி நிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்து அதன்படி தயாரித்தவர் கலைஞர்.
கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மொத்தமாக 29 அணைகள் கட்டப்பட்டுள்ளன.
நீர் பாசனக் கால்வாய்கள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் எனப் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
2011-ம் ஆண்டுக்குப் பின்னர் வரைக்கும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், விவசாயிகளுக்கு ஆதரவாக அவரது குரலோ, எழுத்தோ ஒலித்துக் கொண்டேதான் இருந்தது.
இயற்கை ஒத்துழைக்கும் வரை தமிழர்களுக்காக உழைப்பேன்” என்று சொன்னவரை, இன்று இயற்கை தன்னுடனே வைத்துக் கொள்ள அழைத்து சென்றுவிட்டது.
#credit : துரை.நாகராஜன்
#image : பாடலூர் விஜய்
#திராவிட_பேரரசன் 
#கலைஞர் 
#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Comments