‘எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி’ திருவாரூர் ஆற்று மணல் முதல் நீடித்த கலைஞர் மு.கருணாநிதி - நாகூர் E.M.ஹனிபாவின் நட்பதிகாரம்!

முகநூலில் கலைஞரிஸ்ட் பக்கத்தின் பதிவுகளை பார்வையிட இங்கே அழுத்தவும்

கலைஞரிஸ்ட் யூடியூப் சேனலை பார்க்க

டிசம்பர் 25
கழக இசை முரசு பிறந்த தினம் இன்று.

2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ம் தேதியின் மாலையில் `இசை முரசு’ நாகூர் ஹனிபாவின் மரணச் செய்தி அனைவரது நெஞ்சிலும் பேரிடியாக விழுந்தது.

சென்னைக் கோட்டூர்புரத்திலுள்ள நாகூர் ஹனிபாவின் வீட்டு வாசலில் கவலையுடன் நின்றுகொண்டிருந்தார் அன்றைய தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

அவரைக் கடந்து சென்றால், வீட்டின் முற்றத்தில் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தது நாகூர் ஹனிபாவின் உடல்.

தி.மு.க தலைவர் கலைஞர், தன் ஆருயிர் தோழனுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார் என்ற தகவல் பரவியதும் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாகிறது.

தி.மு.க நிர்வாகிகள் படைசூழ கலைஞர்  வருகிறார். தன் மகன் மு.க.ஸ்டாலினை அழைத்து ஏதோ விவரம் கேட்கிறார்.

`நாளை நாகூரில் நல்லடக்கம்’ என்று ஸ்டாலின் சொல்வதைக் கேட்டுக் கொள்கிறார்.

கலைஞரின் சக்கர நாற்காலி, இறந்து கிடத்தப்பட்டிருக்கும் தன் நண்பன் இருக்கும் திசையை நோக்கி நகர்த்தப்படுகிறது.

கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் ஆயிரக்கணக்கான மேடைகளில் பாடிக் களைத்து மீளாத்துயிலில் இருந்த ஹனிபாவை கலைஞர் ஒரு சில நிமிடங்கள் மெளனமாகப் பார்க்கிறார்.

அந்த நொடி, அவர் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹனிபாவை முதன்முதலில் சந்தித்துக் கொண்டதை நினைவுகூர்ந்து இருக்கலாம்.

அவர்களுக்குள் இருந்த மகத்தான நட்பை எண்ணிப் பார்த்து இருக்கலாம்.

கலைஞரின் அந்த மெளனம் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லின.

கலங்கிய கண்களோடு பத்திரிகையாளர்களைச் சந்திக்க ஆயத்தமாகிறார் கலைஞர்.

கலைஞருக்கும் ஹனிபாவுக்கும் இடையில் இருந்தது 75 ஆண்டுகால நட்பு.

அந்த உறவுக்குள் முரண்பாடு எதுவும் வந்ததில்லை; கசப்பான நிகழ்வுகள் நடந்ததில்லை.

இளமையிலும், முதுமையிலும், வெற்றிகளிலும் தோல்விகளிலும் ஆரத்தழுவிக்கொள்ளும் நட்பு அவர்கள் இருவரிடையே இருந்தது.

பள்ளிக்கூடம் போகாமல், இசை மீது நாட்டம் கொண்டு, நாகூரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இறை வணக்கப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார் நாகூர் ஹனிபா.

அதன் விளைவாக, ஏழாம் வகுப்பில் தேர்ச்சியடையாமல் போகிறார்.

இசை, பாடல்கள் என்று பொறுப்பில்லாமல் சுற்றும் பதின்வயது மகனை, திருவாரூரில் இருக்கும் தன் தம்பியின் மளிகைக் கடையில் வேலை செய்ய அனுப்புகிறார் ஹனிபாவின் தந்தை.

வேறு வழியில்லாமல், திருவாரூர் செல்கிறார் ஹனிபா.

திருவாரூரில் ஓடம்போக்கி ஆறு பெரும்பாலும் தண்ணீரின்றி கிடக்கும்.

அந்த ஆற்று மணலில் நீதிக்கட்சியின் கூட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கூட்டங்களுக்கான பணிகளை நால்வர் படை ஒன்று சுறுசுறுப்பாகச் செய்துகொண்டிருக்கும். சிங்கராயர், ரெங்கராஜ், ராமன், கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர்தான் அந்த நால்வர்.

அரைக்கால் ட்ரவுசர் அணிந்தபடி, கருணாநிதி என்ற அந்தப் பள்ளி மாணவன் மேடையைச் சரி செய்வது, நாற்காலி எடுத்துப் போடுவது, பேச்சாளர்களுக்குத் தேநீர் வாங்கித் தருவது என அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துகொண்டிருப்பார்.

பள்ளி மாணவராக இருந்த போதும், கலைஞரின் பேச்சும் எழுத்தும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்படி இருந்ததால், பெரும்பாலும் அவர்தான் அனைத்துக் கூட்டங்களுக்கும் தலைமை.

அரைக்கால் ட்ரவுசர் அணிந்த பள்ளி மாணவனின் தலைமையில் நடக்கும் அரசியல் கூட்டங்களை அனைவரும் வியந்தபடி பார்த்துச் செல்வர்.

நாகூரில் இருந்த போதே திராவிட இயக்கத்தின் மீது ஹனிபா கொண்டிருந்த ஈடுபாடு திருவாரூரிலும் தொடர்ந்தது.

இரவு எட்டு மணிக்கு நடக்கவிருக்கும் கூட்டங்களுக்கு மாலை ஆறு மணிக்கே சென்று விடுவார் ஹனிபா.

நாகூரில் ஏற்கெனவே பாரதிதாசன் பாடல்களைப் பாடிப் பழக்கமிருந்ததால், திருவாரூரிலும் அவர் பாடத் தொடங்கினார்.

திருவாரூரில் பிறந்த கலைஞரையும், நாகூரில் பிறந்த ஹனிபாவையும் நண்பர்களாக்கியது திராவிடக் கருத்தியல்.

ஓராண்டுதான் திருவாரூரில் ஹனிபாவால் தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஊரில் இருந்தது போலவே, திருவாரூரிலும் அரசியல், கட்சி என்று பாடித் திரிந்ததால், மீண்டும் நாகூருக்கே அனுப்பப்பட்டார் ஹனிபா.

நீதிக்கட்சித் தலைவரான பன்னீர்செல்வம் அவர்கள் லண்டனில் இந்திய அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதைப் போற்றி, நாகூரில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி, ஊர்வலமாக அழைத்துச் சென்றார் ஹனிபா.

லண்டனுக்குப் பதவியேற்பதற்காகப் பன்னீர்செல்வம் சென்ற விமானம் விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்தது, விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டு, 1940ல், திருவாரூரில் நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது.

கலைஞர் அப்போது தொண்டர் படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஹனிபா அந்த மாநாட்டு மேடையில், `பரகதி அடைந்தனையே பன்னீர்செல்வமே’ என்று பாட, தொண்டர்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனர்.

கலைஞருக்கும், ஹனிபாவுக்கும் இடையிலான நட்பு பலமானது.

கலைஞர் அரசியல் களத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, ஹனிபா வெளியூர்களில் கச்சேரிகளுக்குச் செல்லத் தொடங்கினார்.

1949ம் ஆண்டு, ஈரோட்டில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்ற போது, கலைஞர் எழுதி, நடித்த `தூக்குமேடை’ நாடகம் அரங்கேற்றப்பட்டது.

நாடகத்திற்கான வாத்தியக் குழுவினர் வருவதற்கு தாமதம் ஏற்பட, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.

கலைஞர் உடனே மற்ற தொண்டர்களிடம், `கூப்பிடுங்கள் ஹனிபாவை!’ என்று கூறினார்.

இரண்டு, மூன்று நாள்கள் தொடர்ந்து கச்சேரி செய்து வந்த ஹனிபா மேடையின் பின்பக்கமிருந்த புல்தரையில் சோர்வினால் உறங்கிக் கொண்டிருந்தார்.

தன் நண்பனின் அழைப்பை ஏற்று, வாத்தியக் குழு வரும் வரை பாடல் பாடி, கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார் ஹனிபா.

திராவிட முன்னேற்றக் கழகம் உருவாவதற்கு முன்பு, அவர்கள் கலந்துகொண்ட கடைசி தி.க மாநாடு அதுதான்!

பெரியாரிடமிருந்து பிரிந்து சென்று, அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகிறது.

தமிழ்நாடு முழுவதும் கட்சி வளர்ப்பதற்காக, மாநாடுகள் முதல் தெருமுனைக் கூட்டங்கள் வரை நடத்தப்படுகின்றன.

கலைஞர் மேடைகளில் அரசியல் பேசி, கட்சியை வளர்த்துக்கொண்டிருந்த வேளையில், ஹனிபா பாடல் பாடி வளர்த்துக்கொண்டிருந்தார்.

`ஹனிபாவின் தொண்டையைப் போல அவரது தொண்டும் மாறாமல் இருக்கிறது’ என்று தனக்கே உரிய பாணியில் ஒருமுறை குறிப்பிட்டார் கலைஞர்.

1952ம் ஆண்டில் கொடைக்கானலுக்குச் சுற்றுலா பயணமாக கலைஞர், ஹனிபா, அன்பில் தர்மலிங்கம் முதலானோர் சென்றிருந்தனர்.

கருணாநிதியின் எழுத்தில், 'பராசக்தி ’ திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது.

அப்போது அவர்கள் கொடைக்கானல் ஏரியில் படகுப் பயணம் சென்றிருந்தனர். அன்பில் தர்மலிங்கம் விடுத்த வேண்டுகோளையடுத்து, `வாழ்க வாழ்கவே வளமார் திராவிட நாடு’ என்று பாடினார் ஹனிபா.

அந்தப் பாடலைக் கேட்ட மக்கள், படகிலிருந்து இறங்கியதற்குப் பிறகு மீண்டும் பாடச் சொல்லினர்.

கலைஞர் தலையசைக்க, பாடலைப் பாடினார் ஹனிபா.

அன்பில் தர்மலிங்கம் கலைஞரிடம், அந்தப் பாடலை ‘பராசக்தி’ திரைப்படத்தில் வைக்குமாறு கேட்க, `வசந்தகுமாரி' அந்தப் பாடலைப் பாடுவதாக காட்சி எழுதினார் கலைஞர். 

1953 ம் ஆண்டு கோவையில் தி.மு.க மாநாடு நடைபெற்ற போது, `நம் நாடு’ நாளிதழில் `அழைக்கின்றார் அண்ணா..!’ என்ற பாடல் வெளிவந்திருந்தது.

அந்தப் பாடலைப் படிக்கும் கலைஞருக்கு அதனை இசையுடன் கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

`இந்தப் பாடலைப் பாடுவதற்கு ஏற்ற குரல் நாகூரில்தான் இருக்கிறது’ என்று கூறிய கலைஞர், ஹனிபாவை அழைத்துப் பாடச் சொல்கிறார். ஹனிபாவும், தானே இசையமைத்து அந்தப் பாடலைப் பாடுகிறார்.

கலைஞருக்கு மிகவும் பிடித்த பாடலாக `அழைக்கின்றார் அண்ணா’ என்றுமே இருந்திருக்கிறது.

காரில் போகும் போது, அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே பயணம் செய்வார்.

அவர் எழுதிய `அம்மையப்பன்’ திரைப்படத்தில், அந்தப் பாடலைச் சேர்த்திருந்தார் கலைஞர், எனினும் அது தணிக்கைத் துறையால் வெட்டப்பட்டது குறித்த வருத்தம் அவரை விட்டு நீங்கவேயில்லை.

அதன்பிறகு, கலைஞரின் கல்லக்குடி போராட்ட வெற்றியைப் பாராட்டி, `கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்று பாடினார் ஹனிபா.

நாகூரில் தான் கட்டிய வீட்டுக்கு, தன் நண்பர் கலைஞரைப் போற்றும்விதமாக, `கலைஞர் இல்லம்’ என்று பெயர் சூட்டினார்.

``என் மீது எவ்வளவு அன்பு இருந்தால், தான் உழைத்துக் கட்டிய வீட்டுக்கு என் பெயர் சூட்டியிருப்பார்” என்று நெகிழ்ந்து போனார் கலைஞர்.

ஹனிபா வீட்டு நிகழ்ச்சிகளில் கலைஞர் தவறாமல் கலந்துகொள்வார்.

1974ம் ஆண்டில் கலைஞர் நாகூர் ஹனிபாவை தி.மு.க சார்பில் மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்தார்.

`எனக்குப் பேசவே வராது. என்னைப்போய் மேல்சபை உறுப்பினராக நியமிக்கிறீர்களே’ என்று ஹனிபா கேட்க, `பேச வராது என்றால், பாடுங்கள்!’ என்றார் கலைஞர்.

அந்த ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் சிறப்பான அம்சங்களைப் பாடலாக்கி மேல்சபையில் பாடினார் ஹனிபா.

மேல்சபை உறுப்பினராக மட்டுமல்லாமல், ஹனிபாவுக்கு `கலைமாமணி விருது' , `கலைஞர் விருது' முதலானவற்றை அளித்து சிறப்பித்தார் கலைஞர்.

ஒருமுறை ஹனிபாவை வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடச் சொன்னார் கலைஞர்.

அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த ஹனிபாவை, வக்பு வாரியத்துக்குத் தலைவராக்கி அழகுபார்த்தார்.

அப்போது கலைஞரிடம் சென்ற ஹனிபா, ``எனது பிழைப்புக்கு இந்தப் பதவியால் இடையூறு ஏற்படுமா?” என்று கேட்க, ``நீங்கள் தாராளமாகக் கச்சேரிகளுக்குச் சென்று பாடலாம்.” என்று கனிவாய் பதிலளித்திருக்கிறார் கலைஞர்.

ஹனிபாவும், கலைஞரும் தங்கள் இருவரின் வளர்ச்சியையும் ஒன்றுபோல கொண்டாடினர்.

ஹனிபாவுக்கு `கலைஞர்’ விருது அளித்த போது பேசிய கலைஞர், `எனக்கு நானே விருது அளித்தது போல உணர்கிறேன்’ என்றார்.

கலைஞர் 2006ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற போது, ``அந்த மகிழ்ச்சியில் எனக்கு இளமை திரும்பிவிட்டது” என்றார் ஹனிபா.

தி.மு.கவிலிருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கிய போது, ஹனிபாவையும் அழைத்தார்.

அப்போது ஹனிபா, ``எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி” என்று கூறி, எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்தார்.

கலைஞர் அதனை `ஹனிபா கற்பு தவறாதவர்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கலைஞர், ``ஆடாமல் அசையாமல் அலைபாயாமல் சபலத்துக்கு ஆட்படாமல், எதிரிகள் கோடியிட்டு அழைத்தாலும் தொடேன் தொடேன்! என்கிற உறுதிமிக்க இசைவாணர் நாகூர் ஹனிபா” என மனதாரப் பாராட்டினார்.

கலைஞரின் தேர்தல் வெற்றியையும், தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியதையும் பார்த்து மெய்சிலிர்த்துப் போனாராம் ஹனிபா.  

கலைஞர் மு.கருணாநிதி ,நாகூர் ஹனிபா, பேராசிரியர் க.அன்பழகன் ஆகிய மூவரும் ஒத்த வயதுடையவர்கள்.

மூவரும் நெருங்கிய நண்பர்கள். தன் நண்பர்கள் இருவரின் தோள் மீது கைபோட்டு, ஹனிபா நடுவில் நிற்கும் காட்சி யாருக்கும் வாய்க்காதது.

ஹனிபாவின் மரணத்தின் போது, கலைஞர் கண்ணீர் மல்க, நா தழுதழுத்து, அவரைப் பாராட்டி ``அவரையா இழந்துவிட்டோம் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

`இசைமுரசு' என்று அவர் ஒருவரைத்தான் அழைக்க முடியும்.

அப்படிப்பட்ட என்னுடைய ஆருயிர் நண்பரை இழந்து தவிக்கிறேன்.

உங்கள் கண்ணீரோடு, என் கண்ணீரையும் கலந்து, ஹனிபாவுடைய புகழ் வாழ்க வாழ்க!” என்று அழுதார்.

கலைஞர், காவேரி மருத்துவமனையிலிருந்து மீண்டு எழுந்து வர வேண்டும் என உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது.

ஆனால், இறுதி வரை அவர் வரவேயில்லை.😢

தன் வெண்கலக் குரலால் கலைஞரைத் தட்டி எழுப்ப ``சிம்மக்குரலோன்" ஹனிபா இருந்திருக்க வேண்டும்.

ஹனிபா விட்டுச்சென்ற இடம் எத்தகையது எனக் கடந்த (2018) ஆகஸ்டு ஏழாம் தேதி மாலை 6.10 தமிழகத்துக்கு உணர்த்திச் சென்றது!

Credit : Vikatan

திராவிட_பேரரசன் 👑
கலைஞர் 🕶🖋

கலைஞரிஸ்ட் - kalaignarist

Comments