பெரியாரின் பெருந்தொண்டன் கலைஞர்

தந்தை” என்ற ஒற்றை வார்த்தை போதும். அது "பெரியார்" என்று யாரும் சொல்லிவிடமுடியும்.
அப்படி எம் தமிழினம் "கலைஞரை" அடையாளம் காட்டும் வார்த்தை “தலைவர்”.
அத் தலைவரின் புகழுக்கும் , வெற்றிகளுக்கும் , அவரைச் செதுக்கிய தோல்விகளுக்கும், காரணம் அவர் தனக்கு தானே வேண்டி விரும்பி ஏற்றுக் கொண்ட ஆளுமையாம் “பெரியாரின் பெருந் தொண்டர்” என்பதே என் கட்டுரையின் கட்டு.
கலைஞர் என்ற தொண்டனுக்கு, போராளிக்கு அத்தனை பண்புகளும்,கலைகளும், சிறப்புகளும் சிறப்பாய் அமைந்ததற்கு காரணம் , பெரியார் வழிக்களத்தை அவர் தேர்ந்தெடுத்ததனால் தான்.
அத்தனை திறமைகள் இல்லாமல் போய் இருந்தாலும், இல்லை குறைவு பட்டிருந்தாலும், தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் கலைஞர் என்பது உறுதி.
எப்படி ?
பெரியாரின் கொள்கையை பின்பற்றியதால்.
உடன் பிறப்புக்கு கடிதம் எழுதிய போதெல்லாம் பெரியாரின் சிந்தனைச் சிறப்பை கலைஞர் கலந்தே தந்திருக்கிறார்.
ஆட்சி பீடத்தில் ஏறியதும், கொள்கை மறந்து கொள்முதல் செய்யும் உலகத்தில், தன் வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு பெரியார் கொள்கை வழி சட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர்.
தொண்டனை கூட காலில் விழ அனுமதிக்காத, சுயமரியாதை சிந்தனைக்கு காரணம் "தலைவர்" பெரியாரின் பெருந் தொண்டர் என்பதால்.
இயற்கை தனக்களித்த அத்தனை கலைவழியிலும் பெரியாரின் கொள்கைக்கு வலு சேர்த்ததால். பெரியாரின் தொண்டர் “தலைவர் “.
சுயமரியாதைக் கொள்கையை தூக்கிப் பிடித்து ,சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காக போராடிய பெரியாரை மக்களின் தலைவராக ஒளிவீசச் செய்த ஆளுமை கலைஞருடையது.
பெரியார் கொள்கைகள் தமிழகத்தின் ஒளிவிளக்கு .அதை மக்கள் மனதில் அணையாமல் பாதுகாத்த கரங்கள் கலைஞருடையது.
பெரியார் என்னும் கசப்பு மருந்தினை , தன் ஆட்சி அதிகாரத்தால் எளிமையாக்கி மக்களுக்கு தந்த தொண்டர் கலைஞர்.
பெரியார் வழிப் பாதை என்ன , மலர்ப் பாதையா ?!
ஆரியனைப் பகைத்து சூத்திரனை அரியணை ஏற்கவைக்கும் சமுக நீதிப் பாதை.
ஆண்டாண்டு காலம் நம்மை அடக்கியே வாழ்ந்த ஆரியன் அடி மடியில் கைவைக்க நினைத்தால் விடுவானா?!
வேரிலே வெட்டி விடுவான்.
படுத்துக் கொண்டே ஜெயிக்கவைக்கும் வழியும் அல்ல.
மட மத நம்பிக்கைகளில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தோரை தட்டி எழுப்ப வைக்கும் வழி.
ஆரியப் படைகளுக்கும் அதன் காலட்படைகளுக்கும் , நேர் எதிர் நிற்க வைக்கும், வழி பெரியார் வழி.
ஒடுக்கப் பட்ட மக்களில் இருந்து ஒரு கொள்கை சார்ந்த அமைப்பு உருவாகிரதென்றால் அதை உருத்தெரியாமல் அழிக்க ஆயிரம் திட்டங்கள் போடுவான்.
ஆரியனை பகைத்து ஆட்சி பிடிப்பது அதனினும் கடினம் .
எள் முனையும் இடம் தர மாட்டான் .
அங்கே பிடித்து காட்டியவர் அண்ணா.(1967 மார்ச்) தம்பி கலைஞர் துணையுடன் பெரியார் வழியில்.
காலம் அண்ணாவை விரைவாய் பிரித்துச் சென்றது(1969 பிப் 03) .
தலைவன் சாய்ந்தான்
களம் நம்முடையது என்று சூழ்சிக்காரர்கள் இறுமாந்திருந்த சமயம்.
அவர்களுக்கு இடியென நிகழ்வு.
ஆட்சிப் பொறுப்பில் கலைஞர்,
1969, என்ன நடக்கிறதென்றே எதிரி அறியும் முன் அடுக்கடுக்காய் பெரியாரின் கனவுகள் அரசுச் சட்டமாக்கப் படுகின்றன.
வளர்ச்சி என்றால் என்ன என்று மொத்த இந்தியாவுக்கும் பாடம் நடத்திச் சென்றார் கலைஞர்.
மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை
நில உச்சவரம்பு சட்டம்,
உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி,
விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி,
கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை.
அத்தனையும் பெரியார் வழி , சிந்தனைச் சிற்பியின் கனவுகள்.
அதிகாரம் வந்ததும் , அத்தனையையும் செயல் படுத்தத் தொடங்கி பெரியார் சிந்தனையை செயலாற்றும் கடமை வீரரானார் கலைஞர்.
அடுத்த சிலகாலம் மகோரா வின் ஆட்சி பெயரில் தான் திராவிட ஆட்சி , பெரியாரின் கொள்கைகள் காற்றில். அதற்குள்ளாக, அங்கே தன் ஆரிய வேர்களை ஆளப் பதிந்திருந்தான் எதிரி.
அது இன்றும் வளைந்து விஷ விருட்சமாய்.
கொள்கை காத்தவன் ஆயுதமின்றி. தமிழகமே தன் வளர்ச்சியைத் தானே தள்ளிப் போட்ட காலமது. 
வேறு ஒருவர் என்றால் வீழ்ந்திருப்பார்.
கலைஞர், பெரியார் பாதை முட்பாதை என்பதை உணர்ந்தவர் என்பதால் , கொள்கை தாங்கியபடி தாக்குப்படித்திருந்தார்.
உண்மைத் தொண்டனும் உணர்ந்தே இருந்தான். கலைஞரை, அவர் தம் கொள்கைப் பிடிப்பை.
காலம் கனிந்தது,
பெரியாரின் தொண்டனின் கையில் ஆட்சி.(1989) .
60 வருடங்களுக்கு முன் பெரியார் சொன்ன வார்த்தைகள் சட்டமாகின “பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை”
பெரியார் சிந்தனை வளர்ச்சித் திட்டங்கள் புலிப் பாய்ச்சலில் செயல்படுத்தப்பட்டன கலைஞரால்.
ஒடுக்கப் பட்டவன் வாழ்வில் கல்வி ஒளி பெருக்கிட , தந்தை சொல் வழி தனயனாம் தலைவர் கலைஞர், இட ஒதுக்கீட்டு அளவை 69 சதமாக உயர்த்துகிறார்.
பிற்படுத்தப் பட்டோர்களுக்கு 30%, மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% , தாழ்த்தப் பட்டோருக்கு 18 % , பழங்குடியினருக்கு 1% என இடஒதுக்கீட்டில் பெரியார் வழியை சட்டமாய் உறுதி செய்கிறார்.
1990 ஆகஸ்டு, பெரியாரின் சமுக நீதியை , மண்டல் கமிசன் பரிந்துரைகளை, வி.பி. சிங் அவர்களுடன் நின்று தேச முழுமைக்கும் கொண்டு செல்ல முயன்ற காலத்தில் தான், இவர் அழித்தொழிக்கப் படவேண்டியவர் என்ற எண்ணம் மேல் வர்ணத்தின் முதல் நோக்கமானது.
எதிரிகளை உக்கிரமாக்கியதும் , துரோகிகள் எண்ணங்களை வக்கிரமாக்கியதும் அந்த கொள்கை வழிதான்.
1996 ஏப்ரல்  தாய்த்தமிழகம் திருந்தி, திரும்பி பெரியாரின் பெரும் தொண்டனுக்கு களத்தைத் தந்தது.
மீண்டும் பெரியார் வழி அரசு.
நால் வர்ணத்தின் அடிப்படை அகற்றும் அறுக்கும் பணி , பெரியார் நினைவு சமத்துவபுரம், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவப்பட்டது இந்த காலக் கட்டத்தில் தான்
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், பெரியாரை நினைவில் வைத்தார். அவர் கொள்கைகளை அரசில் வைத்தார்.
வளர்ச்சி அரசியலில் , கொள்கை அரசியலில் தோற்கடிக்கமுடியாத கலைஞரை உணர்ச்சி அரசியலில் தோற்க்கடித்தாலும்.
இன்றும் தமிழகத்தின் ஒரே அரசியல் கலங்கரை விளக்கம், பெரியார் கொள்கையின் விளக்கம்.கலைஞர் .
ஆளும் காவிப் படைகளும், இன்று தமிழகத்தில் தான் கால் பதிக்க முடியாமல், இருப்பதற்கு பெரியாரே காரணம் பெரியார் வழி நடந்து , துன்பங்களை விரும்பி ஏற்றவர் கலைஞர்.
இன்று தமிழகத்தில் கடவுளுக்கு அடுத்து அதிகம் விமர்சிக்கப் பட்டதும், அதிகம் புகழப்பட்டதும் பகுத்தறிவை உரக்கச் சொன்ன கலைஞர் தான்.
பகுத்தறிவு கொள்கை கொண்ட தொண்டருக்கு இது ஒரு நகை முரண்.
கலைஞர் இத்தனை முறை உரசிப் பார்க்கப் பட்டதும், புடம் போடப் பட்டதும், அவர் நடந்த பெரியார் கொள்கைகளால் தான். தங்கம் என்று உணரப் பட்டதும் அதே பெரியார் பெருந் தொண்டர் என்பதால் தான்.
இந்தியாவின், எங்கோ ஒரு ஓரத்தில் அம்பேத்கார் தொண்டர், இன்னும் வருந்திக் கொண்டிருப்பார், பெரியாருக்கு கலைஞரைப் போல் எம் அண்ணலுக்கு ஒரு பெரும் தொண்டர் இல்லையே என்று.
அவ்வகையில் காலம் எங்களுக்கு வழங்கிய கொடை இந்தப் பெரியாரின் பெருந் தொண்டர் கலைஞர் , பெரியார் சிந்தனைகள். வளர்க
#Credit: ரீமா
#Periyar
#பெரியார்
#திராவிட_பேரரசன் 
#கலைஞர் 
#கலைஞரிஸ்ட் - #kalaignarist

Comments