இலவச மருத்துவமனையாக்கி கொள்ள கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளையிடம் ஒப்படைத்த தலைவர் கலைஞர்
2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடக்க விழா நடந்த போது, ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், "கலைஞர் கருணாநிதி மருத்துவமனை' அமைப்பதற்காக கோபாலபுரம் வீட்டை மக்களுக்காக தானமாக வழங்க முதல்வர் கலைஞர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இம்மருத்துவமனையை நிர்வகிக்க, தொழிலதிபர் ரங்கநாதன், இயக்குனர் ராமநாராயணன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராஜா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை அறங்காவலர்களாக நியமித்து தலைவர் கலைஞரின் தாய் பெயரில், "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை" என்ற அறக்கட்டளையை தலைவர் கலைஞர் நிறுவினார்.
கலைஞரின் 87வது பிறந்தநாள் [ 03-06-2010 ] கொண்டாடப்படுவதற்கு முதல் நாள், தானப் பத்திரம் மூலம் தன் இல்லத்தை, "கலைஞர் கருணாநிதி மத்துவமனை'' என்ற பெயரில், "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை''க்கு நன்கொடையாக அளித்தார்.
இதற்கான பத்திரப்பதிவு 2010 ஜீன் காலை 9:45 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது, கலைஞரின் மனைவி தயாளு அம்மாள், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, ஆ.ராசா, தமிழக அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராஜன், குழந்தைசாமி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தொழிலதிபர் ரங்கநாதன், இயக்குனர் ராமநாராயணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மத்திய சென்னை பத்திரப்பதிவுத் துறை உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரிஹரன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சுதர்சனம், பழனிஆண்டவன், ஆடிட்டர் சிவசுப்ரமணியம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பத்திரப்பதிவு நடந்தது.
பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை தலைவரின் உதவியாளர் சண்முகநாதன் வாசித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைவர் கலைஞர் கோபாலபுரம் இல்லத்தை 1955ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1968ம் ஆண்டு தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேர் பெயரில் இந்த வீட்டை கலைஞர் எழுதி வைத்தார்.
"இந்த இல்லத்தை தான் மற்றும் தன் மனைவி தயாளு அம்மாள் காலத்திற்கு பின், ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சை பெற இலவச மருத்துவமனையாக மாற்ற இலவசமாக அளிக்கிறேன்'' என, தலைவர் கலைஞர் அறிவித்ததையடுத்து, தலைவர் கலைஞரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கோபாலபுரம் வீட்டை மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவரும் 2009ம் ஆண்டு மீண்டும் கலைஞரிடமே ஒப்படைத்தனர்.
இன்று பத்திரப்பதிவு மூலம் இந்த வீடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
தலைவர் கலைஞர், அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக மாறும். "கலைஞர் கருணாநிதி மருத்துவமனை" என்று அந்த மருத்துவமனை அழைக்கப்படும்.
இந்த மருத்துவமனையை "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை" நிர்வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தன் வீட்டை தானமாக வழங்குவதற்கான பத்திரத்தில் தலைவர் கலைஞர் கையெழுத்திட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி: நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்த இந்த வீட்டை ஏற்கனவே அறிவித்தபடி இன்று ஒப்படைத்து விட்டீர்கள். உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது?
பதில்: நான் ஆஸ்திகனாக இருந்தால் ஆத்ம திருப்தி என்று சொல்லி இருப்பேன். நான் ஒரு நாத்திகன் என்பதால் மனநிறைவுடன் இருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் இப்படியொரு முடிவு எடுத்த போது உங்கள் வீட்டையே தானமாகக் கொடுக்க முன்வந்த போது உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?
பதில்: என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்தப் பிரச்சினையிலும் அவர்கள் நடக்கவில்லை.
கேள்வி: உங்களுடைய இந்த வீட்டில் எத்தனையோ தலைவர்கள் வந்து உங்களைச் சந்தித்திருக்கிறார்கள். எத்தனையெத்தனையோ நிகழ்வுகள், திருப்பங்கள், முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தத் தலைவர்கள் சந்திப்பில் முக்கியமானதாக எதைக் கருதுகிறீர்கள்?
பதில்: எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். அதிலே நான் குறிப்பிட்டு சிலரை மட்டும் சொல்வது நல்லதல்ல.
கேள்வி: இந்த வீட்டைப்பற்றி நினைவிலே கொள்ளத்தக்க நிகழ்ச்சி மலரும் நினைவுகள் என்பார்களே அதைப் போல?
பதில்: நினைவிலே கொள்ளத்தக்க நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சி தான்.
கேள்வி: உங்களுக்குப்பிறகு இங்கே அமையவுள்ள உங்கள் பெயரிலான மருத்துவமனை எவ்வாறு இயங்கும் என்பதைப்பற்றி அறங்காவலர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்களா?
பதில்: இதைப்பற்றியெல்லாம் நீங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களை எதிர்காலத்தில் அணுகி அந்த விவரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி: சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு தி.மு.க. தலைமையில் மாற்றம் இருக்குமா?
பதில்: மாற்றமும் இருக்காது, ஏமாற்றமும் இருக்காது என்றார்.
ThankYouMK Kalaignar Karunanidhi DMK4India DMK
திராவிட பேரரசன் 👑
கலைஞர் 🖋
கருணாநிதி 🕶💺
கலைஞரிஸ்ட் - kalaignarist
Comments
Post a Comment